ஆந்திர முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு
ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். அதிருப்தியை சமாளிக்க தெலுங்கானா பகுதியை சேர்ந்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கிரண்குமார் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதனைத் தொடர்ந்து ராஜ்பவன் செல்லும் அவர் தமது அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்க உள்ளார்.
பின்னர் அங்கு நடைபெறும் எளிய விழாவில் கிரண்குமார் ரெட்டி ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
உடல்நிலையை காரணம் காட்டி ரோசையா அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து கிரண்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலுங்கானா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சரின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ரோசையா ஆந்திர முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் வயது மூப்பு, ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களின் எதிர்ப்பு, தெலுங்கானா ஆகிய விவகாரங்களால் ரோசையாவால் முதலமைச்சர் பதவியில் திறம்பட செயல்பட முடியவில்லை.
இதனால் ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் துணை முதலமைச்சர் பதவியில் அமர்த்தி ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் மேலிடம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று தனி தெலுங்கானா கோரி போராடி வரும் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே துணை முதலமைச்சர் பதவியை புதிதாக உருவாக்கி அதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கிரண்குமார் ரெட்டி, ஆந்திர வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
webdunia.com